முல்லேரியா மற்றும் ஐ.டி.எச் வைத்தியசாலை வேறு இடத்திற்கு : களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அனைத்து புதிய கட்டிடங்களுக்கு தடை… அனுமதியற்ற நிர்மாணங்கள் அகற்றம்.. ஜனாதிபதி பணிப்புரை…

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் ஆற்று நீரை கட்டுப்படுத்தும் வகையில் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத குப்பை மேடுகளை உடனடியாக தடுத்து நிறுத்தவும், முல்லேரியா மற்றும் ஐ.டி.எச் வைத்தியசாலையை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (03) கொலன்னாவ, களனி மற்றும் அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து மோசமான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களைக் கண்டறிவதற்காக, கொலன்னாவ சேதாவத்த வெஹரகொட ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போது , இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அம்பத்தலே கல்வான புராண ரஜமஹா விகாரை, சேடவத்த வெஹெரகொட புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் .எஸ். சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலயத்தின் பாதுகாப்பு நிலையங்களுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்களின் நலன்களைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாகச் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு முதல் உணவு வழங்குமாறு கொலன்னாவ பிரதேச செயலாளருக்கு அறிவித்த ஜனாதிபதி, அந்த மக்களின் சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.