ரகசியக் காப்பு வழக்கிலிருந்து இம்ரான் கான் விடுவிப்பு.
ரகசியக் காப்புறுதியை மீறியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், அவரது வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவா்களை இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது.
இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடந்த 2022 ஏப்ரலில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் தோல்வியடைந்த அவா் பிரதமா் பதவியை இழந்தாா்.
அதற்கு 2 வாரங்களுக்கு முன்னதாக, தனது அரசுக்கு எதிராக அந்நிய சக்திகள் சதித் திட்டம் தீட்டுவதாக குற்றம் சாட்டிவந்த இம்ரான் கான், அதற்கு ஆதாரமாக அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்துடன் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்ற ஆவணத்தின் ஒரு பகுதியை பொதுக்கூட்டமொன்றில் காட்டினாா்.
இதன் மூலம், தனது ரகசியக் காப்புறுதியை மீறியதாக இம்ரான் மீதும் அவரது அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த குரேஷி மீதும் இஸ்லாமாபாதிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இம்ரான் கான் மற்றும் மஹ்மூத் குரேஷி மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்ததுடன் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து இம்ரான் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்ததுடன் இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பையும் நிறுத்திவைத்தது.
அத்துடன், வேறு வழக்குகளில் தடை இல்லாவிட்டால் இம்ரானையும் குரேஷியையும் சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் இம்ரானுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவா் சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படமாட்டாா் என்று கூறப்படுகிறது.