இந்தியாவில் இருந்து படகு மூலம் வந்த 07 பேர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு குடிபெயர்ந்த 5 பேரும் , அவர்களுக்கு உதவி செய்த இருவரும் தலைமன்னார் உறுமலை கடற்கரையில் வைத்து இலங்கை கடற்படையினரால் நேற்று (3) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான இந்த படகை அவதானிப்பதற்காக கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு அதனைச் சோதனையிட்ட பின்னர், இந்த 5 சட்டவிரோத குடியேற்றவாசிகளும் அவர்களைக் கொண்டு வந்த 2 படகுக்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான புலம்பெயர்ந்தோர், தாங்கள் போரின் போது வடக்கில் இருந்து இந்தியாவிற்கு தப்பிச் சென்றவர்கள் என்றும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு அதிக பணம் இல்லாமையால் , மீன்பிடி படகுக்கு சிறிய தொகையை செலுத்தி வந்ததாகவும் கடற்படையினரிடம் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் வவுனியா, தலைமன்னார் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசித்த 27 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.