சர்வஜன வாக்கெடுப்பு கதையை மீண்டும் வலியுறுத்தும் ரங்கே பண்டார (Video)
அரசியலமைப்பில் மூன்று தேர்தல்கள் மட்டுமே உள்ளன. ஒன்று சர்வஜன வாக்கெடுப்பு. மற்றைய இரண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல். சர்வஜன வாக்கெடுப்பு என்பது மக்களை நேரடியாகவும் வலுவாகவும் பாதிக்கும் வாக்களிக்கும் உரிமையாகும். ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றால், பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை.
– பாலித ரங்கே பண்டார
தாம் அரசியலமைப்பிற்கு எதிராக எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை எனவும், ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இதனால் அரசியலமைப்பு ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் வாக்கெடுப்பு நடத்த முடியும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் படி மக்களின் வாழ்வுரிமைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்கப்பட வேண்டும் என முன்னர் தெரிவித்த கருத்து தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்றை விடுத்து நேற்று (03) சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரங்கே பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“பொது வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தின் பங்கை நான் கூறினேன். இந்த இரண்டு விவகாரங்களும் அரசியலமைப்புக்கு எதிரானவை அல்ல, ஜனநாயகத்துக்கு எதிரானவையும் அல்ல. இவை அரசியலமைப்பில் உள்ளது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். அரசியலமைப்பில் உள்ள ஒரு விதியைப் பற்றி நான் பேசினேன். நாட்டின் பெரும்பான்மையான மக்களிடம் அது பற்றிய நம்பிக்கை உள்ளது என்பதை நான் உங்களிடம் வெளிப்படுத்தினேன்.
“அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நான் முன்வைத்த கருத்தை சில கட்சிகள் எதிர்க்கலாம். என்னை குற்றம் சொல்ல முடியும். ஆனால், அரசியல் கட்சிகள் என்ற வகையில் ஒருமித்த கருத்துக்கு வந்து, தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தை அப்படியே தொடரத் தயாரா என்பதை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மற்ற அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தை ஏற்று, இந்த திட்டத்தை தொடருமா என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொள்கிறேன்.
அரசியலமைப்பில் மூன்று தேர்தல்கள் மட்டுமே உள்ளன. ஒன்று சர்வஜன வாக்கெடுப்பு. மற்றைய இரண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல். சர்வஜன வாக்கெடுப்பு என்பது மக்களை நேரடியாகவும் வலுவாகவும் பாதிக்கும் வாக்களிக்கும் உரிமையாகும். ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றால், பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம். அச்சிடுவதற்கு அதிகமான தாள்கள் என்பதால் பணம் தேவை. தேர்தல் பிரசாரங்களுக்கு அதிக பணம் செலவாகிறது. இதற்கு இரண்டு பக்கங்கள் மட்டுமே உள்ளன. வாக்கெடுப்புக்கு ஒரு லட்சம் போனால், ஜனாதிபதி தேர்தலுக்கு நூறு லட்சம்.
நான் ஜனநாயக விரோதமாக செயல்படவில்லை என்பதை நிரூபித்துள்ளேன்.