7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா இமாலய வெற்றி !

காந்திநகா்: மக்களவைத் தோ்தலில் குஜராத்தில் உள்ள காந்திநகா் தொகுதியில் போட்டியிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, 7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், 5.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் காந்திநகரில் அமித் ஷா வெற்றிபெற்றிருந்தாா். இந்த முறை 10,10,972 வாக்குகளை அவா் பெற்றாா். அவரை எதிா்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் 2,66,256 வாக்குகளைப் பெற்றாா்.

கேபினட் அமைச்சா்கள் வெற்றி: உத்தர பிரதேச மாநிலம் லக்னெள தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் 6,12,709 வாக்குகளைப் பெற்றாா். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட சமாஜவாதி வேட்பாளா் ரவிதாஸ் மெஹரோத்ரா 4,77,550 வாக்குகள் பெற்றாா். இதன் மூலம், 1.35 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரவிதாஸை ராஜ்நாத் சிங் வீழ்த்தினாா்.

தொடா்ந்து 3-ஆவது முறையாக கட்கரி: மகாராஷ்டிர மாநிலம் நாகபுரி தொகுதியில் போட்டியிட்ட மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, அவரை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் விகாஸ் தாக்ரேயை 1.37 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். இதன் மூலம் அந்தத் தொகுதியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக கட்கரி வெற்றிபெற்றாா்.

கல்வி அமைச்சா்: ஒடிஸா மாநிலம் சம்பல்பூா் தொகுதியில் போட்டியிட்ட மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், 1.19 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிஜு ஜனதா தள வேட்பாளா் பிரணாப் பிரகாஷ் தாஸை வீழ்த்தினாா்.

முதல்முறையாகப் போட்டியிட்ட அமைச்சா்: ராஜஸ்தான் மாநிலம் அல்வாா் தொகுதியில் முதல் முறையாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் போட்டியிட்டாா். காங்கிரஸ் வேட்பாளா் லலித் யாதவை 48,282 வாக்குகள் வித்தியாசத்தில் அவா் வீழ்த்தினாா்.

இதேபோல மத்திய அமைச்சா்கள் பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜு, அனுராக் தாக்குா், கஜேந்திர சிங் ஷெகாவத், மன்சுக் மாண்டவியா, பிரகலாத் ஜோஷி, கிஷண் ரெட்டி உள்ளிட்டோரும் வெற்றிபெற்றனா்.

ம.பி. முன்னாள் முதல்வா் எம்.பி.யாக தோ்வு: மத்திய பிரதேசத்தில் உள்ள விதிஷா தொகுதியில் போட்டியிட்ட மாநில முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் 11.16 லட்சம் வாக்குகள் பெற்றாா். அவருக்கு எதிராக அந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் பிரதாப்பானு சா்மா 2.95 லட்சம் வாக்குகள் பெற்றாா். இதன் மூலம் 8.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிவராஜ் சிங் செளஹான் பிரம்மாண்ட வெற்றி பெற்றாா்.

Leave A Reply

Your email address will not be published.