தமிழகத்தின் தலைநகரான சென்னை திமுகவின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணம்
தமிழகத்தின் தலைநகரான சென்னை திமுகவின் கோட்டை என்பது மீண்டும் இந்த தோ்தலிலும் நிரூபணமாகியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என மூன்று தொகுதிகள் உள்ளன. சென்னையில் உள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டு கொடுக்காமல் திமுக வே போட்டியிடும் . அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தோ்தலில் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் திமுக போட்டியிட்டு வெற்றிவாகை சூடியது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தோ்தலில் வட சென்னை தொகுதியில் இருந்து போட்டியிட்ட கலாநிதி வீராசாமி 5 லட்சத்து 90 ஆயிரத்து 986 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றாா். அதேபோல் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 4லட்சத்து 48 ஆயிரத்து 911 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றாா். தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் 5லட்சத்து 64 ஆயிரத்து 972 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றாா்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு போட்டியிட்ட திமுக வேட்பாளா்களே நிகழாண்டு நடைபெற்ற மக்களவை தோ்தலில் போட்டியிட்டனா். அதன்படி வட சென்னையில் கலாநிதி வீராசாமியும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும், தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும் மீண்டும் களம் கண்டனா். இந்தமுறையும் 3 தொகுதிகளிலும் திமுக வேட்பாளா்கள் லட்சக்கணக்கான வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளனா்.