ஒட்டிசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.
ஒட்டிசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் த.அகிலன் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(29) செவ்வாய்க்கிழமை பி.ப 2.00மணிக்கு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ குலசிங்கம் திலீபன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடப்பாண்டுக்கான இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேச அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
குறிப்பாக மணல் மற்றும் கிரவல் தொடர்பான கனியவள பிரச்சினைகள், வீதி புனரமைப்பு, சுகாதார சேவை வசதிகள், நீர்ப்பாசனம் மற்றும் மதகு, வடிகால் புனரமைப்பு, நன்னீர் மீன்பிடி, பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து முதலிய பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் அவர்களின் பிரதிநிதியாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.