ஹமாஸ் கடத்திய பிணைக் கைதிகளில் மேலும் நால்வர் மாண்டுவிட்டதாக இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவிப்பு

ஹமாஸ் போராளிகளால் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கடத்தப்பட்ட பிணைக் கைதிகளில் மேலும் நால்வர் மாண்டுவிட்டதாக இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

காஸாவின் தென்பகுதியில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்‌ரேலிய ராணுவம் அதிரடி நடவடிக்கை நடத்தியபோது அந்த நால்வரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாண்ட நால்வரின் சடலங்களை ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை என்று அறியப்படுகிறது.

51 வயது நடாவ் பொப்பல்வேல், 79 சயிம் பெரி, 80 வயது யோராம் மெட்ஸ்கர், 85 வயது அமிராம் கூப்பர் ஆகியோர் உயிரிழந்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த இஸ்‌ரேலியரான நடாவ் பொப்பல்வேலின் மரணம் தம்மை மீளாத் துயரில் ஆழ்த்தியிருப்பதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் கெமரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இதற்கிடையே, ஹமாஸ் போராளிகளால் கடத்தப்பட்ட பிணைக் கைதிகளில் மூன்றில் ஒருவர் மாண்டுவிட்டதாக இஸ்‌ரேல் நம்புகிறது.

பிணைக் கைதிகளை மீட்பதில் இஸ்‌ரேலும் அமெரிக்காவும் மும்முரம் காட்டி வருகிறது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று இஸ்‌ரேலின் தெற்குப் பகுதிக்குள் நுழைந்து ஏறத்தாழ 1,200 பேரைக் கொன்றுவிட்டு கிட்டத்தட்ட 250 பேரை ஹமாஸ் போராளிகள் கடத்தி காஸா முனைக்குக் கொண்டு சென்றனர்.

இதையடுத்து, காஸா போர் வெடித்தது.

இஸ்‌ரேல் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் மடிந்தனர்.

கடந்த எட்டு மாதங்களாகத் தலைவிரித்தாடும் போரில் குறைந்தது 36,470 பேர் மாண்டுவிட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.

2023ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 105 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

43 பேர் மாண்டுவிட்டதாக இஸ்‌ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

120 பேர் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அவர்களது நிலை குறித்து தெரியவில்லை என்று இஸ்‌ரேல் தெரிவித்தது.

இஸ்‌ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிணைக் கைதிகள் கொல்லப்படுவர் என்று ஹமாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.