சீன வங்கி மோசடி : பணம் இழந்து, நியாயம் கேட்கச் சென்றோர் மாதக் கணக்கில் தடுத்து வைப்பு
சீனாவில் பதிவாகியுள்ள ஆகப் பெரிய வங்கி மோசடிகள் ஒன்றில் பணம் இழந்த பலர், ஹெனான் மாநிலத்தின் தலைநகரான செங்சோவில் உள்ள ரயில் நிலையத்துக்கு வெளியே கூடி, ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஹெனானில் உள்ள நான்கு வங்கிகளில் பணத்தைப் போட்ட ஏறத்தாழ 60,000 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 4.2 பில்லியன் அமெரிக்க டாலர் பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை 2022ஆம் ஆண்டில் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ரயில் நிலையத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தியோரை அடையாளம் தெரியாத ஆடவர்கள் பலர் பேருந்துக்குள் தள்ளி காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
பணம் இழந்து நியாயம் கேட்கச் சென்றவர்கள் அங்கு பல நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்குக் கெட்டுப்போன உணவு கொடுக்கப்பட்டதாகவும் தூங்க முடியாமல் அவர்கள் அவதியுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு மூவரைத் தவிர மற்றவர்களைக் காவல்துறையினர் விடுவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து செங்சோ நகராட்சி மன்றம், ஹெனான் பொதுப் பாதுகாப்புத் துறை, சீன அரசாங்கம் கருத்து தெரிவிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.