தேசிய கல்வி நிறுவகத்தில் தமிழருக்கு எதிரான இனவாதம் .மனோ கணேசன் எம்பி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சபையில் சுட்டிக்காட்டு.

உங்கள் கல்வி அமைச்சின் கீழ்வரும் தேசிய கல்வி நிறுவகத்தில், பணிப்பாளராக பணி புரியும் கலாநிதி. எஸ். கருணாகரன் மீது பாரபட்சம் காட்ட பட்டு, அவர் தனது பணியை செய்ய விடாமல் அவருக்கு தொல்லை கொடுக்க படுகிறது. உடனடியாக இதை கவனியுங்கள். அவர் இப்போது பாதுக்கவில் அமைந்துள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி நிர்வாக அபிவிருத்தி திணைக்களத்தில் பணிப்பாளராக பணி செய்கிறார். இங்கே என்ன பிரச்சினை? அவர் ஒரு தமிழர். மலையக தமிழர். இதுவா பிரச்சினை? என என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இன்று பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவிடம் கேள்வி கோரிக்கை எழுப்பினார்.
இன்று சபையில் நடைபெற்ற கல்வி அமைச்சு தொடர்பான முழுநாள் விவாத பிரேரணையின் போது, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவிடம் மேற்கண்ட கேள்வி கோரிக்கையை எழுப்பிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,
இந்த வருடம் பெப்ரவரி மாதம், தகைமை அடிப்படையில் நேர்முக பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்றதால், கலாநிதி. எஸ். கருணாகரன் பணிப்பாளர் பதவியில் நியமிக்க பட இருந்தார். ஆனால், அவருக்கு இந்த பதவியை தர முட்டுக்கட்டை போட பட்டது. நான் அப்போதே இப்பிரச்சினையில் தலையிட்டு அவருக்கு நியாயம் பெற்று கொடுத்தேன். அப்புறம் என்ன? அதை தொடர்ந்து அப்போது இருந்தே இவருக்கு இனவாத அடிப்படையில் தொல்லை தொந்தரவு கொடுக்க படுகிறது. அப்போதே உங்களிடமும், ஜனாதிபதி செயலகத்திடமும் இதுபற்றி அறிவித்தும் இருந்தேன்.
இங்கே என்ன பிரச்சினை? அவர் ஒரு தமிழர். மலையக தமிழர். இதுவா இவர்களுக்கு பிரச்சினை?
கலாநிதி. எஸ். கருணாகரன் மீது இனவாதம் காட்டும் நபர்களின் பெயர் விபரங்கள் என்னிடம் இங்கே இருக்கின்றன. எனக்குள்ள பண்பாடு கருதி அவற்றை இங்கே நான் பகிரங்கமாக சொல்ல வில்லை. அவர் ஜனாதிபதிக்கு இதுபற்றி எழுதியுள்ள புகார் கடித நகலை எனக்கும் அனுப்பி உள்ளார். அதை எனது மேற்கோள் கடிதத்துடன் உங்களுக்கு இதோ தருகிறேன். அவருக்கு நியாயம் பெற்று கொடுங்கள்.
இந்நாட்டில் நாம் இன்று இனவாத பிசாசை கடந்து வந்துள்ளோம். எனவே, இவர்கள் தொடர்பில் நீங்கள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுங்கள். அவர்களுக்கு இங்கே இவருடன் பணி செய்ய முடியாவிட்டால், அவர்கள் வேறு எங்காவது போகட்டும். ஆனால், கலாநிதி எஸ். கருணாகரன் நிம்மதியாக இங்கே பணி செய்ய இடம் இருக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
மனோ எம்பியின் புகார் ஆவணத்தை பெற்றுக்கொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, இதுபற்றி உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.