டி20 உலகக் கோப்பை அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் தனது முதல் குரூப் சுற்று போட்டியில் இந்திய அணி, அயர்லாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 46 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூயார்க் நாசா கவுண்ட்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் பிட்ச் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. வேகப் பந்துவீச்சாளர்கள் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் பந்துகளை எளிதாக வீசினர்.
இந்திய அணியின் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் வரிசையாக விக்கெட்களை இழந்த அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்களும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தனர். முகமது சிராஜ் மற்றும் அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதில் பும்ரா மூன்று ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். பும்ரா ஒரு மெய்டன் ஓவர் வீசி இருந்தது குறிப்பிடத்தக்கது. 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. பிட்ச் பந்து பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய அணியின் பேட்டிங் குறித்து அனைவருக்கும் ஒரு பயம் இருந்தது. நினைத்தது போலவே விராட் கோலி 5 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
எனினும், ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி போட்டியை இந்திய அணியின் வசம் எடுத்து வந்தார். ரிஷப் பண்ட் அவருக்கு ஒத்துழைத்து வேகமாக ரன் சேர்த்தார். ரோஹித் சர்மா 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அதன் பின் சூர்யகுமார் யாதவ் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறிய தடுமாற்றம் இருந்த போதும் கடைசியாக ஆறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரிஷப் பண்ட் அதிரடியாக சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
12.2 ஓவர்களில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்களே முக்கிய காரணம் என்றாலும் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்காத பிட்ச்சில் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் தங்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற உதவினர்.