சந்திரபாபு நாயுடு – மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பு!
ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆதரவு கட்டாயம் தேவை என்ற சூழலில், ஸ்டாலினின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவும், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள மு.க.ஸ்டாலினும், நேற்று தில்லியில் நடைபெற்ற அவரவர் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
கூட்டத்துக்கு பிறகு தில்லி விமான நிலையத்தில் இருவரும் சந்தித்த புகைப்படங்களை மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள ஸ்டாலின், “தில்லி விமான நிலையத்தில் கருணாநிதியின் நீண்ட கால நண்பரான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன். சகோதர மாநிலங்களான தமிழகம் – ஆந்திரம் இடையேயான உறவை வலுப்படுத்துவோம் என்ற நம்பிக்கை தெரிவித்தேன். அவர், மத்திய அரசின் முக்கிய பங்காற்றுவார், தென் மாநிலங்களுக்காக வாதிட்டு நமது உரிமைகளை பாதுகாப்பார் என நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்பிக்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனித்து 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.