உயிர்விடும் நிலையிலும் ஏழை மாணவர்களுக்குத் தனது கோடிக்கணக்கான சொத்துகளைத் தானம் செய்த ஸ்ரீவித்யா.
தனது உயிரைவிடும் நிலையிலும் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக தனது கோடிக்கணக்கான சொத்துகளைத் தானமாகக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார் பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யா .
விழிகளால் பேசும் நடிகை என்று ஸ்ரீவித்யாவை பலரும் வர்ணிப்பதுண்டு. நடிப்பையும் அவரது கண்கள் பேசும் வசனங்களையும் ரொம்பவே ரசித்தார்கள் மக்கள்.
தனது பேசும் கண்களைக் கொண்டும் ஆகச்சிறந்த நடிப்பைக் கொண்டும் ஏராளமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துப் பாராட்டுகளைப் பெற்றவர் ஸ்ரீவித்யா.
திரையுலகில் நடிப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும். அதன்பின்னர் பிரபலமாகி விடலாம் என்று பலரும் நினைக்கின்றனர்.
ஆனால், திரையுலகம் அனைவரும் நினைப்பது போல அவ்வளவு கவர்ச்சியான உலகமல்ல.
சில நடிகர்களின் வாழ்க்கைப் பக்கங்களைப் படிக்கும்போது அவர்களது கதைகள் படிப்போரின் கண்களிலும் கண்ணீர் முட்ட வைக்கின்றன.
அழகுக்குப் பெயர் போன நடிகை ஸ்ரீவித்யா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி, கர்நாடக இசைப் பாடகி எம்.எல். வசந்தகுமாரி தம்பதியரின் மகள்தான் நடிகை ஸ்ரீவித்யா.
குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக தனது 14 வயதில் திரையுலகிற்குள் நுழைந்தவர் நடிகை ஸ்ரீவித்யா.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘திருவருட்செல்வன்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஸ்ரீவித்யா, அதைத்தொடர்ந்து ‘பெட்டராஷி பெத்தம்மா’ படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானார்.
அற்புதமான நடிப்பு, ஆளை அசத்தும் நடனம், ஈர்க்கும் அழகு காரணமாக ஸ்ரீவித்யாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத்தொடங்கின.
இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசனுடன் நடித்தார் ஸ்ரீவித்யா.
இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து, தெலுங்கிலும் மறுபதிப்பு செய்யப்பட்டது. அதிலும் நடிகை ஸ்ரீவித்யாதான் கதாநாயகியாக நடித்தார்.
அதன்பிறகு, பல படங்களில் ஸ்ரீவித்யாவும் கமல்ஹாசனும் இணைந்து நடித்தனர்.
திரைப்பட வாழ்க்கையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஸ்ரீவித்யாவும் கமல்ஹாசனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
ஸ்ரீவித்யாவின் தாய் இவர்களின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால் அவர்களது காதல் வாழ்க்கை முறிந்துபோனது.
அதன்பின், 1978ல் மலையாள இயக்குநர் ஜார்ஜ் தாமஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீவித்யா.
திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் விருப்பத்திற்கு ஏற்ப தனது சினிமா வாழ்க்கையில் இருந்து விலகினார்.
ஆனால், அதன்பிறகு அவரது வாழ்க்கை பெரும் நிதி நெருக்கடியில் சிக்க, மீண்டும் திரையுலகுக்குள் நுழைந்தார் ஸ்ரீவித்யா.
ஆனால், அவரது சொத்துகளை அவரது கணவர் அபகரித்துக்கொள்ளவே இருவரும் திருமண வாழ்வில் ஏற்பட்ட விரிசலால் 1980ல் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர்.
அதன்பின், திரையுலகில் மீண்டும் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீவித்யா, தமிழ் , தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து அசத்தினார்.
இருப்பினும், 2003ல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தன்னுடைய வாழ்நாள் குறைந்து கொண்டே போவதை உணர்ந்தார்.
இதையடுத்து, மிக முக்கிய முடிவு ஒன்றை எடுத்த ஸ்ரீவித்யா அதன்படி, தான் நடித்து சேர்த்துவைத்துள்ள கோடிக்கணக்கான சொத்துகளை இசை, நடனக் கல்லூரியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்க முன்வந்தார்.
நடிகர் கணேஷின் உதவியுடன் அறக்கட்டளை ஒன்றை நிறுவி தகுதியானவர்களுக்கு உதவிகள் சென்றடைய ஏற்பாடுகளைச் செய்தார் ஸ்ரீவித்யா.
மூன்றாண்டு காலம் புற்றுநோயுடன் போராடிய நடிகை, 2006ஆம் ஆண்டு தனது 53 வது வயதில் உயிரிழந்தார்.