கங்கனாவை கன்னத்தில் அறைந்தது இதனால் தான்.. CISF பெண் காவலர் விளக்கம்!
கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்தது குறித்து சிஐஎஸ்எப் பெண் காவலர் விளக்கமளித்துள்ளார்.
தமிழில் ஜெயம் ரவியின் “தாம் தூம்” படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். முன்னணி நடிகையான இவர் அரசியலிலும் ஈடுபாடு காட்டுகிறார்.
மேலும், தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட “தலைவி” மற்றும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்துள்ளார். தற்போது நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக மந்தி தொகுதியில் களமிறங்கிய கங்கனா 537022 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, டெல்லி செல்வதற்காக நடிகை கங்கனா ரணாவத் சண்டிகர் விமான நிலையம் வந்தபோது, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு அவரை சிஐஎஸ்எப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார். உடனே, இது தொடர்பாக கங்கனா ரனாவத் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, அந்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கங்கனாவை தாக்கியது குறித்து விளக்கமளித்துள்ள காவலர் குல்விந்தர் கவுர், “100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கங்கனா கூறியிருந்தார்.
அவரால் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உட்கார முடியுமா? கங்கனா இந்த கருத்தைச் சொல்லும்போது அந்தப் போராட்டத்தில் என் அம்மாவும் போராடிக் கொண்டிருந்தார்” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.