அடக்கியாள நினைத்தால் ஒன்றுபட்டு எதிர்ப்போம்!! – ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை
“வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தாயகம். இங்கு தமிழ்பேசும் உறவுகளை அடக்கியாள முடியும் என்று ராஜபக்ச அரசு இனியும் எண்ணவேகூடாது. கடந்த 26ஆம் திகதியும், 28ஆம் திகதியும் இங்கு நடைபெற்ற அரசுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களின் வெற்றிச் செய்திகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன.”
– இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அழைப்புக்கிணங்க கடந்த 26ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டமும், 28ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் போராட்டமும் நடைபெற்றன. அதற்குத் தமிழ்பேசும் உறவுகள் முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.
போராட்டம் நாம் நினைத்த மாதிரி வடக்கு, கிழக்கில் வெற்றியடைந்துள்ளது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்பேசும் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அரசு எம்மை அடக்கியாள இனியும் நினைக்கவே கூடாது என்பதைத் தமிழ்பேசும் உறவுகள் ஓரணியில் நின்று புரியவைத்துள்ளனர்.
தமிழ்பேசும் உறவுகளின் இந்த உணர்வுபூர்வ எழுச்சியைக் கண்டாவது அரசு தனது போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழ்பேசும் மக்களுக்கு சகல உரிமைகளையும், நிரந்தர அரசியல் தீர்வையும் வழங்க இந்த அரசு முன்வர வேண்டும்” – என்றார்.