20 இற்கு எதிரான மனுக்கள் 2 ஆம் நாளாகப் பரிசீலனை
அரசமைப்பின் 20ஆவது திருத்த வரைவைச் சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது.
பிரதமர் நீதியரசர் உள்ளிட்ட ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த வரைவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல்வேறு அரசியல்கட்சிகள் மற்றும் பல அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், தொழில் வல்லுனர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரினால் 39 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உயர்நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, “இதுவரையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரைவில், பல புதிய திருத்தங்களை சேர்க்க அரசு தீர்மானித்துள்ளது” என்று அறிவித்திருந்தார்.
அவை நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.