டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இலங்கைக்கு எதிராக முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து வங்கதேசம் சாதனை.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவின் டாலஸ் நகரில் 15வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ் 10 (8), கமிண்டு மெண்டிஸ் 4 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய துவக்க வீரர் பதும் நிசாங்கா 7 பவுண்டரி 1 சிக்சருடன் 47 (28) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த தனஞ்செயா டீ சில்வா தடுமாறி 21 (16) அசலங்கா 19 (21) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அப்போது வந்த கேப்டன் ஹசரங்கா கோல்டன் டக் அவுட்டான நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனுபவ வீரர் ஏஞ்சேலோ 16 (19) ரன்களிலும் முன்னாள் கேப்டன் சனாக்கா 3 (7) ரன்களிலும் பெவிலியன் திரும்பினார். அதனால் 20 ஓவரில் இலங்கை வெறும் 124/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. சொல்லப்போனால் முதல் 14 ஓவரில் 100/3 ரன்கள் எடுத்த இலங்கை ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தது. ஆனால் கடைசி 6 ஓவரில் 24 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை 125/9 ரன்கள் எடுத்து சொதப்பியது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரகுமான் 3, ரிசத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 125 என்ற சுலபமான இலக்கை துரத்திய வங்கதேசத்திற்கு துவக்க வீரர்கள் தன்சித் ஹசன் 3, சௌமியா சர்கார் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அடுத்ததாக வந்த கேப்டன் சாந்தோவும் 7 (13) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். ஆனால் 3வது இடத்தில் அசத்திய லிட்டன் தாஸ் 36 (38) ரன்களும் 5வது இடத்தில் அதிரடியாக விளையாடிய தவ்ஹீத் ஹ்ரிடாய் 40 (20) ரன்களும் எடுத்து வங்கதேசத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்து அவுட்டானார்கள். ஆனால் அடுத்ததாக வந்த சாகிப் அல் ஹசன் 8 (14) ரிசத் ஹொசைன் 1, தஸ்கின் அஹ்மத் 0 ரன்கலோல் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் இலக்கு குறைவாக இருந்ததால் முகமதுல்லா 14 (12) ரன்கள் அடித்து 19 ஓவரிலேயே வங்கதேசத்தை வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2014 சாம்பியனான இலங்கைக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து வங்கதேசம் சாதனை படைத்தது. அதனால் இலங்கை சார்பில் அதிகபட்சமாக துசாரா 4 கேப்டன் ஹஸரங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Leave A Reply

Your email address will not be published.