டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சேரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குரூப் டி பிரிவில் நெதர்லாந்து அணியும், தென்னாபிரிக்க அணியும் நியூயார்க் நகரில் பலப்பரிட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய நெதர்லாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே தடுமாறினார்கள் மைக்கேல் டக் அவுட்டாகியும், மேக்ஸ் ஓ தாவூத் இரண்டு ரன்களிலும், விக்ரம் ஜித் சிங் 12 ரன்களிலும் அந்த அணியின் அதிரடி வீரர் பாஸ் டி லீட் 6 ரன்களிலும் தேஜா நிட்மானாறு டக் அவுட் ஆகியும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதனால் நெதர்லாந்து அணி 48 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து ஏழாவது விக்கெட்டுக்கு சைபிராண்ட் மற்றும் லோகன் வேன் பிரிக் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி ஏழாவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது.இதன் மூலம் நெதர்லாந்து அணி 100 ரன்களை கடந்தது. எனினும் சைப்ரண்ட் 40 ரன்கள், லோகன் வேன் 23 ரன்களிலும் வெளியேற அடுத்தடுத்து நெதர்லாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சில் ஒட்டனேல் பார்ட்மென்ட் நான்கு விக்கெட்டுகளும், ஆன்றிஜ் நோக்கியா இரண்டு விக்கெட்களும் எடுத்தனர். இதனை அடுத்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களம் இறங்கியது. தென்னாப்பிரிக்கா எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மிகப்பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டது. தொடக்க வீரர் ரீசா ஹென்ரிக்யூஸ் மூன்று ரன்களிலும், ஏய்டன் மார்க்கரம்,குயிண்டன் டி காக் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி வெளியேறினர்.
சன்ரைசர்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய கிளாசனும் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.இதனால் தென்னாபிரிக்க அணி 12 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் தென்னாப்பிரிக்காவும் தோல்வியை தழுவும் என ரசிகர்கள் அச்சமடைந்தனர். இதனை அடுத்து களத்திற்கு வந்த டிரிஸ்டன் ஸ்டாப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.
ஒரு கட்டத்திற்கு மேல் தென்னாப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாட தொடங்கியது. டிரிஸ்டன் ஸ்டாப்ஸ் 33 ரன்களில் வெளியேற கடைசிவரை நின்ற டேவிட் மில்லர் 51 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 18.5 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி மோசமான தோல்வியிலிருந்து தப்பித்துக் கொண்டது.