கொலன்னாவ நகரத்தை முழுமையாக அகற்ற ரணில் முடிவு.
கொலன்னாவ நகரை அந்த இடத்தில் இருந்து அகற்றி, அதே பகுதியில் உயரமான இடத்தில் அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இந்த புதிய நகரத் திட்டத்தின் கீழ், தற்போது தாழ்வான பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள், வணிக வளாகங்கள் போன்றவை மேடான நிலத்தில் அமைக்கப்பட உள்ளதாகவும், அதே பகுதியில் அதற்கு ஏற்ற பகுதிகள் இருப்பதாகவும் அரசு கூறுகிறது.
அத்துடன், கொலன்னாவையின் புதிய நகரத் திட்டத்தின் பிரகாரம், அனுமதியற்ற கட்டுமானங்களைத் தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
இத்திட்டத்தின் பிரகாரம் களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பும் தயாரிக்கப்பட உள்ளது.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, பிரேமநாத் சி.தொலவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிந்திய இணைப்பு
மக்களுக்கான சகல வசதிகளுடன் கூடிய புதிய நகரத்தை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் காணிகளை மீட்பதை நிறுத்துவதற்கு அமைச்சரவையின் உத்தரவை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,
” களனி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கு புதிய நகரத்தை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காக மருத்துவமனைகள், பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் IDH மருத்துவமனை, இபோச டிப்போ போன்ற அரசு நிறுவனங்கள் உள்ளன. எனவே புதிய நகரை உருவாக்குவது குறித்து இப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி எதிர்கால செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு அனைவரின் உடன்படிக்கையுடன் சரியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என நம்புகிறோம். அடுத்த பத்து வருடங்களுக்குள் இத்திட்டம் வெற்றியடையும் என நம்புகிறோம்.
மேலும், இதுபோன்ற வெள்ளம் மீண்டும் ஏற்படாமல் இருக்க தகுந்த திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அனுமதியின்றி கட்டுமானம், நிலம் சீரமைத்தல் போன்ற காரணங்களால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனவே, வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் நில மீட்புப் பணிகளை நிறுத்த அமைச்சரவையின் உத்தரவைப் பெறுவோம் என்று நம்புகிறோம்” என்றார்.
கொலன்னாவ பிரதேச மக்களின் சுகாதாரம் மற்றும் இன்னல்கள் தொடர்பில் கண்டறியும் கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.