தோட்டத் தொழிலாளர்களின் EPF, ETF திறைசேரியிலிருந்து செலுத்தப்படும்.
மூன்று அரச தோட்டக் கம்பனிகளில் பணிபுரிந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு நிதி மற்றும் ஊழியர்களின் நிலுவைத்தொகையை அரசாங்க திறைசேரியிலிருந்து செலுத்த தீர்மானித்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். .
நாவலப்பிட்டி ஜயதிலக உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (08) நடைபெற்ற 48வது தேசிய ஜூடோ போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே ,
அரசாங்கத்திற்குச் சொந்தமான மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் அரச தோட்டக் கூட்டுத்தாபனம் உட்பட மூன்று தோட்டக் கம்பனிகளிலும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இத்தொழிலாளர்களின் EPF மற்றும் ETF கிட்டத்தட்ட 40 வருடங்களாக செலுத்தப்படவில்லை, மொத்தத் தொகை 5.7 பில்லியன் ஆகும், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம்.
தற்போது ஏராளமான தொழிலாளர்கள் இறந்து விட்டதால், இழப்பீடு கிடைக்க வழியின்றி, திறைசேரி மூலம் இந்த பணத்தை செலுத்த அரசு முடிவு செய்துள்ளது, எனவே அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.