மத்தியில் அமையவுள்ள புதிய அமைச்சரவை : யார், யாருக்கு வாய்ப்பு?
மத்தியில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்கவுள்ளது. பாஜக கூட்டணியில் யார், யாருக்கு அமைச்சர் பதவி, என்னென்ன இலாகா என்பது தொடர்பாக முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் தில்லியில் உள்ள ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், அமித் ஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஞாயிற்றுக்கிழமை காலையில் பிரதமர் இறுதி முடிவெடுப்பார் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், நித்தியானந்த் ராய், ஜோதிராதித்ய சிந்தியா, எஸ். ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் புதிய அமைச்சரையிலும் இடம்பெறுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, தென் மாநிலங்களில் யார், யாருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்கிற விவரத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, ஏற்கெனவே மத்திய இணையமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில், அக்கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பது ஞாயிற்றுக்கிழமை காலையில் தெரியவரும்.
கர்நாடக மாநிலத்தைப் பொருத்தவரை பாஜகவுக்கு பெரும் பலத்தைக் கொடுத்த ஒக்கலிகர் சமூகத்தின் வாக்கு வங்கியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமிக்கு வேளாண் துறை ஒதுக்கப்படலாம். அதே மாநிலத்தைச் சேர்ந்தவரும் ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்தவருமான பிரகலாத் ஜோஷி மீண்டும் அமைச்சராகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கியக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு கேபினட் அமைச்சர் பதவியும், ஓர் இணையமைச்சர் பதவியும் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கேபினட் அமைச்சராக மோகன் நாயுடுக்கு ஊரக வளர்ச்சித் துறையும், அக்கட்சியின் பி. சந்திரசேகருக்கு நிதித் துறையின் இணையமைச்சர் பதவியும் வழங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரிக்கு இணையமைச்சர் தனிப் பொறுப்புடன் வர்த்தக தொழில் துறையும், சி.எம். ரமேஷுக்கு சுற்றுலாத் துறை இணையமைச்சர் பதவியும் கிடைக்கலாம்.
தெலங்கானாவிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஏற்கெனவே மததிய அமைச்சராக இருந்த ஜி.கிஷன் ரெட்டிக்கு கேபினட் பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்த மாநிலத்தைச் சேர்ந்த பண்டி. சஞ்சய், டிகே அருணாவுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.