யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளைச் சந்தித்த சஜித்.
https://we.tl/t-VedJmkSWzE
யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்துக் கலந்துரையாடியதுடன் நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பாகப் பேசுவதாகவும் வாக்குறுதியளித்தார்.
வடக்கு மாகாண வேலையற்ற பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்.
“நான் அரசியல் நோக்கத்துடன் இங்கு சமூகம் தரவில்லை என்றபடியால், உங்களது பிரச்சினைகள் அனைத்தும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அரசின் பதில்களைப் பெற முயற்சிகளை எடுப்பேன்.
இந்த நாட்டில் சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையிலான வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி அரசில் இவர்களுக்காக மேற்கொள்ள முடியுமான தெளிவான மற்றும் முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். இவர்களுக்கு அரச வேலைவாய்ப்பு அல்லது தொழில் முயற்சியாண்மையை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம். பத்து இலட்சம் புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தி அரசின் முக்கிய நோக்கமாகும்.
அவ்வாறே, மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கும் எந்தவித பாரபட்சமும் இன்றி கிராமத்துக்கும் நாட்டுக்கும் சேவையாற்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம். அவர்களின் திறமைக்கும் அவர்களின் அறிவுக்கும் உரிய இடம் வழங்கப்படும்.” – என்று இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.