ஒரு கிழமைக்கு 18 தமிழர்கள் இனம் மாற்றப்படுகின்றார்கள்- வியாழேந்திரன்
வானத்தில் மட்டும்தான் சூரியன் கிழக்கிலே உதிக்கின்றது, இருளை போக்குகின்றது ஆனால் கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் அந்த சூரியன் உதிக்கவில்லை இதுதான் உண்மை என மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களை புனரமைப்பு செய்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (30) புதன்கிழமை நாவற்குடா இந்து கலாசார மத்திய நிலையத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.குணநாயகம் தலைமையில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தனது உரையில் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 46 இந்து ஆலயங்களுக்கு 4,540,000 நிதியை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வழங்கிவைத்தார்.
இங்கு தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் உரையாற்றுகையில் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த அரசியல் நீரோட்டத்தில் தொடர்ச்சியாக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம், நான் சர்வதேச அரசியலைப்பற்றி சிந்திக்க முன்பு எனது மாகாணம் எனது மாவட்டத்தைப்பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது, ஒரு வீட்டுக்கு தலைவராக இருக்க தகுதி இல்லாத ஒருவர் ஒரு சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியற்றவர் இதுவே யதார்த்த பூர்வமான உண்மை, அதனாலேதான் எனது மாகாணம் எனது மாவட்டம் தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.
இந்த மாகாணத்தில் எமது மக்களுடைய இருப்பு என்பது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு கொண்டு போகின்றது, அதற்கு மிக பிரதான காரண கர்த்தாக்களாக அமைந்தவர்கள், அமைந்து கொண்டு இருப்பவர்கள் கடந்த காலம் முதல் தற்காலம் வரை எமது தமிழ் அரசியல் வாதிகள் என்பதை யாரும் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது இதுதான் யதார்த்த பூர்வமான உண்மை.
58.9 வீதமாக இருந்த தமிழர்கள் தற்போது கிழக்கு மாகாணத்தில் 38.6 வீதமாக குறைந்துள்ளனர். ஒரு கிழமைக்கு 18 தமிழர்கள் இனம் மாற்றப்படுகின்றார்கள். எல்லைப்புறங்களில் உள்ள பல இந்து ஆலயங்கள் உடைக்கப்படுகின்றன, மாமிச கழிவுகள் மூலஸ்தானத்திற்குள் கொடுத்தப்படுகின்றது, கடந்த காலத்தில் 13 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கரை வருடங்களில் ஆலயங்கள் உடைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் முன்னின்று போராடியவன் நானும் என்னை சார்ந்தவர்களும். ஒரு இனத்தினுடைய ஒரு சமயத்தினுடைய கலை, கலாசார பண்பாட்டு அம்சங்கள் மனித விழுமியங்கள் மறுக்கப்படும் பொழுது அதற்கு குரல் கொடுப்பவர்களாக நாங்கள் மாற வேண்டும். அதை பாதுகாப்பவர்களாக நாங்கள் மாறவேண்டும். அதற்காக போராடுபவர்களாக நாங்கள் மாற வேண்டும்.
நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களையோ கிறிஸ்தவ ஆலயங்களையோ கட்டுவதற்கு அப்பால் எம் சார்ந்த சமூகத்தின் இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அவ்வாறு கட்டி எந்த பிரயோசனமும் இல்லை.
அம்பாரை மாவட்டத்தில் பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரை சென்று பார்த்தால் இந்து ஆலயங்கள் மட்டும்தான் இருக்கின்றன, ஆனால் அவற்றை சுற்றி தமிழர்கள் வாழ்ந்ததற்கு எந்த அடையாளங்களும் இல்லை, ஏன் அந்த பகுதியில் இருந்த மக்களின் இருப்பை பற்றி சிந்திக்கவில்லை, சில ஆலய நிருவாகங்கள் அரசியலையே நடத்துகின்றது.
என்னுடைய அரசியல் வாழ்வில் எந்தவொரு இந்து, கிறிஸ்தவ ஆலயத்தையும் எனது அரசியலுக்காக பயன்படுத்தியதே இல்லை, எமது அரசியல் பயணத்தில் எதிர்காலத்திலும் நாம் மத ஸ்த்தலங்களை பயன்படுத்தப் போவதுமில்லை காரணம் இந்துவாக இருந்தாலும் கிறிஸ்தவராக இருந்தாலும் தமிழர்கள் என்ற அடிப்படையில் நாம் போராடிக்கொண்டு இருக்கின்றோம். எமது கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.