விவசாயிகளுக்கு 56 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு எனும் அரச கொள்கைக்கு ஏற்ப வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வோம் எனும் எண்ணக்கருவில் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இயற்கை முறை விவசாயத்தினை மேற்கொள்ளும்விவசாயிகளுக்கான உபகரணங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவினால் இன்று (30) வாகரை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் எஸ். கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்யும் நோக்கில் இயற்கை முறையில் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் 177 போருக்கு சுமார் 56 இலட்சத்தி 39 ஆயிரம் ரூபா பெறுமதியா நீர் இறைக்கும் மோட்டார்கள் கொரிய நாட்டு உதவியுடன் வேல்ட்விசன் அமைப்பில் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 325 விவசாயிகளை பயிற்றுவித்து அவர்களுக்கான உள்ளீடுகள் மற்றும் உபகரணங்களை வழங்கி இயற்கை முறையிலான விவசாயத்தினை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களை வேல்விசன் அமைப்பு 2019 தொடக்கம் 2021 வரையான காலப்பகுதிக்காக மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஓர் அங்கமாகவே இன்று 157 விவசாயிகளுக்கு தலா 27ஆயிரம் ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் மின் மோட்டார்களும், 20 விவசாயிகளுக்கு தலா 70ஆயிரம் ரூபா பெறுமதியான எரிபொருளில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதுதவிர இப்பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்திற்கு சுமார் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 17 வெண்பலகைகள் (வைட்போட்) யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவி ஒருவரால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வீ. பேரின்பராஜா, வேல்ட் விசன் அமைப்பின் வலய முகாமையாளர் ஜே.ஏ. ரமேஸ் குமார், திட்ட முகாமையாளர் ஜீ. ஜெகதீஸ்வரி, உதவி திட்டமிடல் முகாமையாளர் ஈ. பிரகாஸ்குமார், வாகரை பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. சுதாகரன் மற்றும் அரச அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலரும் பிரசன்னமயிருந்தனர்.