13ஆவது திருத்தத்தை தற்போதைய நாடாளுமன்றத்திலிருந்து அமுல்படுத்த வேண்டும் – கரு ஜயசூரிய
இனம், மதம் சார்ந்த பிரச்சனைகள் மீண்டும் எழாமல் இருக்க, ஒவ்வொரு குடிமகனுக்கும் சுயமரியாதையுடன் வாழும் உரிமையை வழங்க வேண்டும் என்றும், வடக்கிலும் தெற்கிலும் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துமாறும் , அந்த பிரச்சனைகளை தீர்க்கும் பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டாம் எனவும் நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. .
தற்போதைய ஜனாதிபதியும் , எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் அரச தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ள 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என அந்த இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“சமீபத்தில், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் இந்த விடயங்கள் தொடர்பாக 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பகிரங்க அறிக்கை ஒன்றையும், தற்போதைய ஜனாதிபதி, ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் முன்னாள் அரச தலைவர்கள், சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். தற்போது பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்காலத்தில் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களும் இந்தக் கருத்தை வலுவாகக் கொண்டுள்ளனர் என நாங்கள் நம்புகிறோம். அந்த நேர்மையான அபிலாஷைகளை நாம் பாராட்ட வேண்டும்.”
இவ்வாறான சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு, இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தற்போதைய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய வட்டமேசைக் கலந்துரையாடலை உடனடியாகக் கூட்டுமாறு அரசாங்கத்தை இயக்கம் வலியுறுத்துகிறது.
எக்காரணம் கொண்டும் இவ்விடயம் தொடர்பான விவாதங்களை தவிர்க்கவோ அல்லது புறக்கணிக்கவோ கூடாது என்பது இந்த நாட்டிலுள்ள அனைத்து தமிழ் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும். இதை நீதியான சமுதாயத்திற்கான தேசிய இயக்கத்தை வலியுறுத்துகிறது.
இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் எதிர்கால சந்ததியினரால் அது தேசத் துரோகச் செயலாகக் குற்றஞ்சாட்டப்படும் என சுட்டிக்காட்டியுள்ள தலைவர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி தலைமையிலான முழுப் பாராளுமன்றமும் இவ்விடயத்தில் நல்லெண்ணத்துடன் தலையிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.