திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்
திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. வாக்குப்பதிவுகளின் எண்ணிக்கை சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்து அதன் முடிவுகள் வெளியானது. அதன்படி, இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது.
அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்தியா கூட்டணி 230 இடங்களை கைபற்றியது.பல்வேறு குழப்பங்களுக்கு அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.
தமிழ்நாடு பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் திமுக அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற குழு நிர்வாகிகள் அமைக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவுகள் படி, திமுகவின் நாடாளுமன்ற குழு நிர்வாகிகளை நியமித்து திமுக தலைவரும்,
தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக துணை பொதுச் செயலாளர் கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மக்களவை குழுத் தலைவராக பொருளாளர் டி.ஆர்.பாலுவும், மக்களவை குழு துணைத் தலைவராக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறனும், மக்களவை கொறடாவாக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவை குழுத்தலைவராக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவும், மாநிலங்களவை குழுத் தலைவராக தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகமும், மாநிலங்களவை கொறடாவாக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சனும்,
இரு அவைகளின் பொருளாளராக கொள்கைபரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகனும் நியமிக்கப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர். பாலு இருந்த நிலையில், தற்போது அந்த பதவியில் கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.