அமராவதிதான் ஆந்திராவின் தலைநகர்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமராவதி இருக்கும் என்றும் அதனை உருவாக்குவதற்கான பணிகள் புத்துயிர் பெறும் என்றும் அந்த மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசக் கட்சி அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) விஜயவாடாவில் நடைபெற்றது.
சட்டமன்றத் தலைவராக தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்ந்து எடுக்கப்பட்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், அமராவதி ஆந்திர மாநிலத் தலைநகரம் என்று அறிவித்தார். அத்துடன், விசாகப்பட்டினத்தை பொருளியல் மையமாகவும் நவீன நகரமாகவும் உருவாக்க தமது அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமராவதித் திட்டம் சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டம். மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதால், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் தலைநகரமாக இயங்கி வந்த ஹைதராபாத், ஒப்பந்தப்படி தெலுங்கானா மாநிலத்துக்குச் சென்றது.
217 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள அமராவதி நகரத்தை மாநிலத் தலைநகரமாக உருவாக்கும் பணிகளை அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முடுக்கிவிட்டார். 2014ல் முதல்வராகப் பொறுப்பேற்ற ஓராண்டில் அமராவதித் தலைநகர் திட்டத்தை அவர் அறிவித்தார்.
15 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி மதிப்பீட்டில் சிங்கப்பூர் நிறுவனங்களின் கூட்டமைப்பு புதிய தலைநகரை உருவாக்குவதில் முக்கிய பங்காற்ற சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்தார்.
இருப்பினும், 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு அரசாங்கம் பதவி இழந்ததும் அமராவதித் திட்டம் கைவிடப்படுவதாக அந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.
ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அந்த அறிவிப்பு வெளியானது.
ஜூன் 4ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் சந்திரபாபு நாயுடுக்குச் சாதகமாக அமைந்ததால் அமராவதித் திட்டம் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை காரணமாக அந்த வட்டார விவசாயிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் விரும்பியதுபோலவே அமராவதிதான் ஆந்திர மாநிலத்தின் தலைநகர் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இருப்பினும், அதற்கான பணிகளில் சிங்கப்பூர் நிறுவனங்கள் மீண்டும் ஈடுபடுத்தப்படுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.