இந்திய வரலாற்றில் முஸ்லிம்கள் இடம்பெறாத முதல் அமைச்சரவை.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக முஸ்லிம்கள் இல்லாத மத்திய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 71 அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். அவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை. இதற்கு முன்னர் பதவி ஏற்ற எல்லா அமைச்சரவைகளிலும் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிமாவது இருந்திருக்கிறார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 24 முஸ்லிம் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களில் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி, ஜம்மு – காஷ்மீர் சுயேச்சை எம்பி அப்துல் ரஷித் ஷேக், லடாக்கின் முகமது ஹனிஃபா ஆகியோர் ஆவர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 293 பேரில் முஸ்லிம், கிறிஸ்துவர் மற்றும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லை. இருப்பினும், மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள கிறிஸ்துவ, சீக்கிய சமூகத்தினருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 14% உள்ள முஸ்லிம் மக்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்காதது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 1999ஆம் ஆண்டு இரு முஸ்லிம்கள் மத்திய அமைச்சர்களாகவும் 1998ல் ஒரு முஸ்லிம் மத்திய இணையமைச்சராகவும் இருந்தனர்.
2004, 2009ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முறையே 4 மற்றும் 5 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
2014ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற போது பாஜகவின் நஜ்மா ஹெப்துல்லா சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக இருந்தார்.
2019ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்வி இருந்தார். 2022ல் அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிறைவடைந்த பின்னர் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.