தேர்தல்களை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை! – ஐ.தே.க. தெரிவிப்பு.

பிரதான தேர்தல்களை ஒத்திவைப்பதற்காகச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் எவ்வித திட்டமும் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடையாது என்று அதன் தேசிய செயலாளரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் எனவும், சுயாதீன பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனைத்து கட்சிகளினதும் ஆதரவு உள்ளது. நாட்டை மீட்கக்கூடிய அனுபவமும் அவருக்குத்தான் உள்ளது. ரணிலின் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களும் உணர்ந்துள்ளனர்.
சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு எவ்வித திட்டமும் இல்லை. அது தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளினதும் நிலைப்பாடாகும்.” – என்றார்.