கோயம்பேட்டில் உள்ள மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் கடும் போராட்டம்!

கோயம்பேட்டில் உள்ள மசூதியை இடிக்க இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் அருகே ‘மஸ்ஜித்-ஏ-ஹிதாயா’ என்ற பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளி வாசல் உள்ள இடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்குச் சொந்தமானதாகும். இங்கு ஏராளமான ஆக்கிரமிப்பு வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கட்டுமான ஒப்புதல் இல்லாமல் மசூதி கட்டப்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் கடந்த 2020ஆம் ஆண்டு அதிகாரிகளால் கட்டுமத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதையும் மீறி சட்டவிரோதமாக பள்ளிவாசல் கட்டப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த பின் குற்றசாட்டு உறுதியானதுடன், மசூதி இடிக்குமாறு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதியாக இருந்தது. இதை தொடர்ந்து, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி மசூதி இடிப்பிற்கு

எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, கோயம்பேடு பள்ளிவாசல் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ” சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் அருகே செக்டர் 3ல்’மஸ்ஜித்-ஏ-ஹிதாயா’ என்ற பள்ளிவாசல் செயல்பட்டு கொண்டு வருகிறது.

முறைப்படி இந்த இடம் கிரையம் செய்யப்பட்டு, 43 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளோம். அதற்கு மேல் எங்கள் சமுதாய மக்களின் பணம் கொண்டு பள்ளி வாசல் கட்டப்பட்டது. முறைப்படியே எல்லாம் செய்துள்ளோம். இதற்கான வரிகளும் நாங்கள் இதுவரை சரியாக கட்டியுள்ளோம்.

சமூக விரோதிகள் சிலர் இந்த மசூதியின் மீது காழ்ப்புணர்வு கொண்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எந்த காரணம் கொண்டும் மசூதி என்பது இடிக்கப்படக்கூடாது என்பதை வேண்டி, இங்கு நாங்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறோம். இந்த மசூதி இடம் சிஎம்டிஏவுக்கான எந்த தேவையும் கிடையாது.

இந்த மசூதி இருக்கும் நிலம் பேருந்து நிலையத்திற்குச் சொந்தமான இடம் என்று சொல்கிறார்கள். கோயம்பேடு பேருந்து நிலையம் மசூதிக்கு இடையே நிறைய நிலப்பகுதிகள் இருக்கிறது. மிகவும் சொற்பமான இந்த இடத்தை எடுத்து சிஎம்டிஏ எதுவும் செய்யவும் முடியாது. இந்த இடத்தை கையகப்படுத்தி,

மசூதியை இடித்து, முஸ்லீம்களின் மத உணர்வில் வேரை பாய்ச்சக்கூடிய செயல் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு நினைத்தால், இந்த பள்ளிவாசல் இடிக்கப்படுவதில் இருந்து பாதுகாத்து மக்களிடம் கொடுக்கலாம். எனவே, இது குறித்து முதல்வர் ஸ்டாலின எங்களுக்கு ஆவணம் செய்ய வேண்டி கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.