யாழ். ஊடகவியலாளர் பிரதீபனின் வீட்டின் மீது தாக்குதல்
வடக்கில் தமிழ் ஊடகவியலாளர் பிரதீபனின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத சிலர் தீ வைத்து எரித்துள்ளதுடன் அவரது வீட்டில் உள்ள சொத்துக்கள் பலவற்றையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் மோட்டார் சைக்கிள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், அவரது சகோதரர் ஒருவரின் முச்சக்கரவண்டியும் குழுவினரால் தாக்கப்பட்டு பலத்த சேதப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம், அச்சுவேலி பத்தமேனி காளி கோவிலுக்கு அருகில் உள்ள தனது வீட்டில் வசிக்கும் ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன், ஜூன் 13 ஆம் திகதி நள்ளிரவு 12.15 மணியளவில் தனது வீட்டிற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வீட்டின் முன்பக்கத்திற்கு தீ வைத்ததாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
தீயினால் வீட்டின் முன் பகுதியில் உள்ள பொருட்கள் உட்பட பல பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், மீன் தொட்டி, வீட்டின் ஜன்னல்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன.
இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட தாக்குதல்களினால் வீட்டின் வாயிலுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர், “திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்க வேண்டாம்” என தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தையும் அந்த குழுவினர் விட்டுச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றார். .
இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், பொலிஸார் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்பித்துரை பிரதீபன் யாழ்ப்பாணத்தில் இருந்து பல ஊடக நிறுவனங்களுக்கு செய்திகளை தொகுத்து வழங்கும் ஒரு முக்கிய சுதந்திர ஊடகவியலாளர் ஆவார்.