குவைத் தீ விபத்தில் பலியான 45 இந்தியர்களின் உடல்கள்,கொச்சி விமான நிலையம் சென்றடைந்தது.
குவைத் தீ விபத்தில் பலியான 45 இந்தியர்களின் உடல்கள், ராணுவ விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு இன்று(வெள்ளிக்கிழமை) சற்றுமுன் கொண்டு செல்லப்பட்டது. கொச்சி விமான நிலையத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி, முரளிதரன், கேரள அமைச்சர்கள், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். அங்கிருந்து உயிரிழந்தவர்களின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குவைத்தின் Mangaf பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில், கேரளத்தை சேர்ந்த 23 தொழிலாளர்களின் உடல்களும், தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்களும், கர்நாடகத்தை சேர்ந்த ஒருவரின் உடலும் கொச்சி விமான நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மீதியுள்ள இந்தியர்களின் உடல்களுடன் ராணுவ விமானம் டெல்லி புறப்பட்டு செல்கிறது. அங்கிருந்து உயிரிழந்த உத்தர பிரதேசம்(4), ஆந்திரா(3), பீகார்(2),ஒரிசா( 2), ஜார்க்கண்ட்(1),மகாராஷ்டிரா(1),பஞ்சாப்(1),மேற்கு வங்காளம்(1) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உயிரிழந்தவர்களின் உடலை இந்தியா கொண்டு செல்லும் பணியை மேற்கொள்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தலைமையிலான குழு நேற்று காலை குவைத் வந்திருந்தனர். இந்த நிலையில், 45 பேரின் உடல்களும் இந்திய ராணுவ விமானம் மூலம் சற்றுமுன் கொச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த விமானத்திலேயே வெளியுறவுத்துறை இணையமைச்சர் உள்ளிட்ட இந்திய அதிகாரிகளும் கொச்சி வந்தடைந்துள்ளனர்.
தமிழக அரசின் சார்பில் தமிழக அயலகத் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையிலான அரசு அதிகாரிகள் குழு தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்களை பெற்று, தமிழக அரசின் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் உள்ளனர்.