இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.150 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வேளாங்கண்ணியில் பறிமுதல்!
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.150 கோடி மதிப்பிலான போதைப்பொருளை வேளாங்கண்ணியில் க்யூ பிரிவு பொலிஸார் நேற்று கைப்பற்றினர். அதேவேளை, காரில் இரகசிய அறை அமைத்து கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்குப் பல கோடி ரூபா மதிப்பிலான போதைப்பொருள் கடத்த இருப்பதாக நாகை க்யூ பிரிவு பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஆய்வாளர் ராமச்சந்திர பூபதி தலைமையிலான க்யூ பிரிவு பொலிஸார் தீவிர சோதனை நடத்தினர். விடுதியில் ஓர் அறையில் தங்கியிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் தெரியவந்த தகவல்கள் குறித்து பொலிஸார் தரப்பில் கூறப்படுவதாவது:-
விடுதியில் இருந்த இருவரும் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் கியாபரி பகுதியைச் சேர்ந்த தில்குமார் தாபாமங்கர் (வயது 34), கவாஸ் (வயது 36) ஆகியோர் மேற்கு வங்கத்தில் இருந்து இராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு ஹசீஸ் போதைப்பொருளைக் கடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக காரில் இரகசிய அறை அமைத்து 75 கிலோ ஹசீஸ் போதைப்பொருளை மறைத்து வைத்துக்கொண்டு, மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்டு வந்துள்ளனர்.
காரில் 1,500 கிலோ மீற்றர் தூரத்துக்கு மேல் பயணம் செய்ததால், வேளாங்கண்ணியில் அறை எடுத்து தங்கிவிட்டு நேற்று (14) இராமேஸ்வரம் சென்று படகு மூலம் போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்ப அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
அவர்கள் 2 பேரையும் க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். 75 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.150 கோடி ஆகும்.
இவர்களுக்குத் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர்தான் செல்போன் வழியாக வழித்தடம் (‘ரூட் மேப்’) போட்டு கொடுத்துள்ளார். அவரைக் கைது செய்ய தஞ்சையில் இருந்து பொலிஸார் தேனி மாவட்டம் விரைந்துள்ளனர்.