1 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் கிளிநொச்சியில் மூவர் கைது…
நேற்று (15) கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். (இலங்கை நாணயத்தில் மொத்த பெறுமதி 300 மில்லியன் ரூபா)
ஒரு மில்லியன் டொலர் நாணயத்தாள்களை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்காக கிளிநொச்சிக்கு அருகில் உள்ள பகுதி ஒன்றுக்கு கொண்டு வந்த போது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து கிளிநொச்சிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இரு அணியினரும் சென்று சந்தேக நபர்களை சோதனையிட்டதில் நாணயத் தாள்கள் கிடைத்துள்ளன.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர்களில் ஒருவர் கூட வெளிநாட்டில் இல்லை எனத் தகவல் கிடைத்துள்ளதுடன், அவர்களுக்கு குறித்த நாணயத்தாள்கள் எவ்வாறு கிடைத்தன என தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அமெரிக்க டொலர் நாணயத்தாள்கள் போலியானவையா என்பதை கண்டறிய கிளிநொச்சியில் உள்ள வங்கிகளின் உதவியை நாடவும் கிளிநொச்சி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கிளிநொச்சி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.