மக்களின் இறைமையை பறிக்கும் ’20’ சட்ட வரைவு – ருவானின் சட்டத்தரணி
மக்களின் இறைமையை
பறிக்கும் ’20’ சட்ட வரைவு
– ருவானின் சட்டத்தரணி எச்சரிக்கை
“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு காரணமாக மக்களின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படும்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தனவின் சட்டத்தரணி இராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றவேளை அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்புக்கான எந்தத் திருத்தம் மூலமும் மக்களின் இறைமைக்கும் பௌத்தத்தின் முன்னுரிமைக்கும் ஆபத்து ஏற்பட அனுமதிக்ககூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசமைப்பின் 20ஆவது திருத்தம் காரணமாக மக்களின் இறைமை இழக்கப்படும். அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு வழங்கப்படும். நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்கள் அற்றுப்போகும்.
20ஆவது திருத்தச் சட்ட வரைவின் மூன்றாவது முதல் 57 வரையான வாக்கியங்கள் இலங்கையின் அரசமைப்புக்கு எதிரானவை. இதன்காரணமாக மக்களின் இறைமை பறிபோகும்.
திருத்தச் சட்ட வரைவு முற்றுமுழுதாக இலங்கையின் அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைக்கு எதிரானது. அது நாடாளுமன்றத்தினதும் நீதித்துறையினதும் அதிகாரங்களை ஜனாதிபதியின் கரங்களில் ஒப்படைக்கின்றது.
இந்தத் திருத்தச் சட்ட வரைவின் அடிப்படையில் சட்டம், ஆட்சி, பொறுப்புக்கூறுதல் என அரசின் மூன்று முக்கிய பிரிவுகள் மத்தியிலான சமநிலை காணாமல்போகும். இது அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிரான விடயம்” – என்றார்.