ஊடகவியலாளரின் வீடு மீதான தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள்! – பொலிஸார் அசமந்தப்போக்கு என்றும் சிறீதரன் குற்றச்சாட்டு.

யாழ். அச்சுவேலியில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதலுக்குள்ளாகி மூன்று தினங்களாகியும் இதுவரை எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

அச்சுவேலியில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளரின் இல்லத்தை நேற்று (16) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே சிறீதரன் எம்.பி. இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்டகாலத்துக்குப் பின்னர் ஊடகவியலாளரை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் கடந்த 13 ஆம் திகதி நடைபெற்று இன்றுடன் (நேற்று) மூன்று நாள்களாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸார் ஆகியோர் தாக்குதலாளிகளைத் தேடுகின்றோம், பிடிக்கின்றோம் என்கிறார்கள். எதுவும் நடப்பதாக இல்லை.

இதே ஜனாதிபதியைப் பற்றியோ அரச உயர் அதிகாரிகள் பற்றியோ யாராவது பதிவு போட்டால் ஒரு சில மணிநேரங்களில் கைது செய்யப்படுவார்.

யாழ். மாவட்டத்தில் மூலைக்கு மூலை இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு இருக்கும்போது எவ்வாறு இவர்களுக்குத் தெரியாமல் மோட்டார் சைக்கிள்களில் துணிகரமாக வாள்கள், பொல்லுகளுடன் வர முடிகின்றது.?

வீட்டுக்கு வெளியே நின்ற பஸ், ஓட்டோவைத் தாண்டி ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிளை இனங்கண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த விடயத்தைத் திசைதிருப்புவதற்காகத் திருநங்கைகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாதிபதி பலாலி வசாவிளான் பகுதியில் காணி துண்டு விடுவிப்புக்காக வந்தபோது, காணி விடுவிக்கப்படவில்லை என்று மக்கள் கூடிய நிலையில் அது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற த.பிரதீபன், க.பரதன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் இராணுவத்தினரால் அச்சுறுத்தலுக்குள்ளாகப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அரசு திறந்தவெளி சிறைச்சாலைக்குள் அடக்குமுறைகளை விரிவுபடுத்தி பிரயோகிப்பதையே இதன்மூலம் பார்க்க முடிகின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.