நான் கட்சியை விட்டு விலகப்போவதில்லை முரண்டு பிடிக்கும் மணி
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-
“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலைப் பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்கத் தகுதியற்றவன்.
நாம் எமது கொள்கை சார்ந்து பயணிக்கும்போது, ஒரு சிலரின் சுயநலம் மற்றும் சுயலாபத்துக்காகத் திசை திருப்ப முற்பட்டபோது அதனைக் கட்சிக்குள் இருந்து நான் கடுமையாக எதிர்த்தேன்
அவர்களின் சுயலாப நோக்கத்துக்கு நான் முட்டுக்கட்டையாக இருந்தமையாலேயே என்னைக் கட்சியை விட்டு நீக்க பல முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்கள்.
கட்சிக்கு என நிதிக்கட்டமைப்பை உருவாக்க முயற்சித்தபோதும் அது ஒரு சிலருக்குப் பிடிக்கவில்லை. நிதிக் கட்டமைப்பை உருவாக்க நினைத்த என்னைக் கடுமையாக எதிர்த்தார்கள்.
இன்று என்னைக் கொள்கை இல்லாதவன் எனக் கூறுபவர்கள் ஏன் முதலிலேயே கட்சியில் இருந்து துரத்தவில்லை? கட்சியின் தலைவர் கஜேந்திரகுமாரும், செயலாளர் கஜேந்திரனும் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் என்னைப் போட்டியிட வேண்டும் என ஏன் மன்றாடினார்கள்?
புதிய கட்சியோ, அமைப்போ உருவாக்குவது எனக்குப் பெரிய விடயமே இல்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கட்சிகளின் உடைவால் சிங்கள தேசியக் கட்சிகள் வடக்கு, கிழக்கில் எழுச்சி பெற்று வருகின்றமையால் அந்த முடிவுக்கு நான் செல்லவில்லை.
நான் உருவாக்கிய கட்சி என் கண் முன்னால் அழிவடைந்து செல்வதைப் பார்த்துக்கொண்டு இருக்கப்போவதில்லை.
கட்சிக்குள் ஜனநாயகப் பண்பற்ற செயற்பாடுகள் தொடர அனுமதித்தால் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராகப் போராடத் தகுதியற்றவனாக இருப்பேன்.
எனவே, மிக விரைவில் கட்சியின் பொதுச்சபையைக் கூட்டி தீர்க்கமான முடிவெடுப்போம்” – என்றார்.