தெலுங்கு தேசம் கட்சி தலைவராக சீனிவாச ராவ் யாதவ் நியமனம்!
ஆந்திரத்தின் விவசாயத் துறை அமைச்சராக இருந்த கே.அட்சநாயுடுவுக்குப் பதிலாக, தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவராக கஜுவாகா எம்.எல்.ஏ பி.சீனிவாச ராவ் யாதவை நியமிப்பதாக, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
விசாகப்பட்டினம் தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக பணியாற்றிய சீனிவாச ராவ் யாதவ், புதிய பொறுப்பை வெற்றிகரமாக மேற்கொள்வார் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “கஜுவாகா எம்எல்ஏ பி.ஸ்ரீனிவாஸ் ராவ் யாதவை ஆந்திரத்தின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக நான் நியமிக்கிறேன். இதுவரை கட்சியை தலைவராக வழிநடத்திய கட்சியின் மூத்த தலைவர் அட்சநாயுடுவை நான் வாழ்த்துகிறேன்” என்று நியமனக் கடிதத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் 25 அமைச்சர்கள் கொண்ட குழுவில் உறுப்பினராக உள்ள அட்சநாயுடுவிடம், விவசாயம், கூட்டுறவு, சந்தைப்படுத்தல், கால்நடை வளர்ப்பு, பால்வள மேம்பாடு மற்றும் மீன்வளத் துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.