தமிழக மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக இந்தியத் துணைத் தூதரகத்தை நாளை முற்றுகையிடவுள்ளோம்! – யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் அறிவிப்பு.

இந்திய இழுவை மடிப் படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தக் கோரி நாளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ள யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், தமக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிடில் நாடாளுமன்றத்தையும் முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் சிறீ கந்தவேல் புனித பிரகாஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்திய இழுவை மடிப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடு எமது கடற்பகுதிகளில் அரங்கேறி வருகின்றது. இதனால் எமது கடற்றொழிலாளர்கள் பெருமளவு பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.

நாளை காலை 10 மணிக்கு இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர், துறைசார்ந்த திணைக்களங்கள் விரைந்து செயற்பட்டு இந்திய இழுவை மடிப் படகுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட எமது அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன.” – என்றார்.

யாழ். மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்திய இழுவை மடி கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் எமது மக்கள் வீதிக்கு வந்து பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டி வரும். சிறுவர் தொடங்கி பெரியவர் இதன்மூலம் பாதிப்புக்களை எதிர்கொள்வர்.

இலங்கை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித நேயத்துடன் இந்திய மற்றும் தமிழக அரசு செயற்பட வேண்டும். இந்தியாவின் மிலேச்சத்தனமாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.

இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக நாளை நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைத்து கடற்றொழிலாளர்களையும் பங்கேற்குமாறு வேண்டுகின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.