தமிழக வெற்றிக் கழகம் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டு டாப் நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் அரசியல் களத்திலும் களமிறங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பல கேள்விகளுக்கு மத்தியில் பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாரபூர்வமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அதன் தலைவராக நடிகர் விஜய் பொறுப்பேற்றார்.
அதன் பின் தளபதி 69 படமே சினிமாவில் தான் நடிக்கவிருக்கும் கடைசி படமென்றும், அதற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி முழுநேர மக்கள் பணியில் ஈடுபடப்போவதாகவும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் விஜய். இது விஜய் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும் அரசியல் களத்தில் விஜய்யின் பணி எவ்வாறு இருக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பை அரசியல் தலைவர்கள், சினிமா வட்டாரங்கள், ரசிகர்கள் மத்தியில் கிளறியது.
மேலும் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி தலைவர் விஜயின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு கட்சியின் சார்பில் நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், தவெக கட்சி தலைவர் சார்பில், பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘‘வருகிற ஜூலை 10 ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான ஆயுத்தப் பணிகளை மேற்கொண்டு தேர்தல் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் தங்களது இலக்கு என்று ஏற்கனவே கூறியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனால் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்று அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.