ரூ.16 லட்சம் கொடுத்து எம்பிபிஎஸ் பட்டம்!….குஜராத்தில்
குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.16 லட்சம் கொடுத்து எம்பிபிஎஸ் பட்டத்தை பெற்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக் கழகம், பணத்தைப் பெற்றுக்கொண்டு போலியான ஹோமியோபதி மருத்துவ சான்றிதழை வழங்கியுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள போலி சான்றிதழ் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் மீது 5 ஆண்டுகள் கழித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவ இடங்களை நிரப்புவதில் பல்வேறு குளறுபடிகளும், அது தொடர்பான குற்றச்சாட்டுகளும் நீடித்து வரும் நிலையில், குஜராத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.16.32 லட்சம் பெற்றுக்கொண்டு, உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்ஸியில் உள்ள புந்தேல்கண்ட் பல்கலைக் கழகம் போலி மருத்துவ சான்றிதழை வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணத்தை செலுத்திய ஒரு மாதத்தில் வகுப்புகளுக்குச் செல்லாமல், எந்தவொரு தேர்வும் எழுதாமல், பயிற்சி இல்லாமல் மருத்துவ பட்டத்தை வழங்கியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு சுரேஷ் பாட்டீல் (41) என்பவர், மருத்துவம் சார்ந்த உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது அகில இந்திய மாற்று மருத்துவ கவுன்சில் சார்பாக எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான பட்டம் வழங்குவது தெரியவந்துள்ளது. இது குறித்து அதில் வழங்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணில் மருத்துவர் பிரேம்குமார் ராஜ்புத் என்பவரையும் தொடர்புகொண்டுள்ளார்.
அதில் அவர், 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் எம்பிபிஎஸ் முடித்த சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் முறைப்படியே நடத்தப்படுவதாக அவர் உறுதி அளித்து பாட்டீலை நம்பவைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆரம்பகட்டமாக ரூ.50,000 செலுத்தியுள்ளார். அதன் பிறகே ஜான்ஸியிலுள்ள புந்தேல்கண்ட் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சுரேஷ் பாட்டீல், ராஜ்புத் 25 முறைக்கும் மேலாக இதைக் கூறியிருப்பார். மருத்துவர் செளகத் கான், மருத்துவர் ஆனந்த் குமார் மற்றும் அருண் குமார் ஆகிய மூவரும் எம்பிபிஎஸ் முடிக்க உதவுவார்கள். அவர் அறிவுறுத்தலின்படி கடந்த ஜூலை 10, 2018 முதல் பிப்ரவரி 28, 2019 வரை ரூ.16.32 லட்சம் செலுத்தினேன்.
வகுப்புகள் ஏதும் தொடங்கப்படவில்லை. கடந்த 2019 மார்ச் மாதத்தில் எம்பிபிஎஸ் மதிப்பெண் சான்றிதழ், மருத்துவர் பட்டம், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் (இன்டர்ன்ஷிப்) அடங்கிய கொரியர் வந்தது. சான்றிதழ்களில் என் பெயரும் இந்திய மருத்துவ கவுன்சிலின் முத்திரையும் அதில் இருந்தது.
இது தொடர்பாக இந்திய மருத்து கவுன்சிலை அனுகியுள்ளார். பின்னர் 2019-ல் அகமதாபாத் குற்றப்பிரிவுக்கு இந்த விவகாரம் கைமாறியது.
2019ஆம் ஆண்டு மேக்சனா காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். எம்பிபிஎஸ் முடிக்க உதவுவதாகக் கூறிய ஆனந்த் குமார் என்பவரின் முகவரிக்கு சென்றும், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. பின்னர் தில்லியிலுள்ள தனியார் வங்கி கிளைக்குச் சென்று விசாரித்தபோது, பலர் ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. விசாரணையில் எந்தவொரு தடயமும் கிடைக்காததால் குற்றவாளிகளை கண்டறிய முடியாத நிலை நீடித்தது.
இது தொடர்பான ஆதாரங்களைத் தேடிய பாட்டீலின் தொடர் முயற்சியால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேக்சனா காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிசம்பர் 2023-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.