கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்றக் காவல்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகர்காபட்டினம் மீனவர்கள் 4 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. மீன் பிடிதடைக்காலம் முடிந்து நேற்று முன் தினத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.
இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து நேற்று 241 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 மீனவர்கள், ஒரு படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். 4 பேரை விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்கின்றனர்.
மேலும், இந்த 4 மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து பிற்பகலுக்கு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.