சட்டமா அதிபருக்கு நீடிப்பு வழங்க ஜனாதிபதியின் பரிந்துரை நிராகரிப்பு!
சட்டமா அதிபரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை மேலும் ஆறுமாதங்களுக்கு நீடிக்குமாறு அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி விடுத்திருந்த பரிந்துரை நேற்று (18) நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பரிந்துரை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பரிந்துரைக்கு எதிராக 05 வாக்குகளும் ஆதரவாக 03 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி குறித்த பிரேரணை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் இந்த பரிந்துரைக்கு கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்தய யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று மாலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.
சட்டமா அதிபரின் சேவையை நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரையை பரிசீலிப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் கூடியிருந்த போதிலும், இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியவில்லை.
சட்டமா அதிபரின் சேவையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
சட்டமா அதிபர் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.