இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவ முகாம்கள் அகற்றம்
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் இருக்கும் பாதுகாப்பு படையின் தலைமையகங்களில் இரண்டு முக்கிய தலைமையகங்கள் அகற்றப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒரு பகுதி வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கும் மற்றொன்று யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன.
போர்ச் சூழலின் போது ராணுவம் வட மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான முகாம்களை நிறுவியது. 2009 ஆம் ஆண்டளவில், வடக்கு மாகாணத்தில் 73,016.50 ஏக்கர் நிலமும், கிழக்கு மாகாணத்தில் 12,236.69 ஏக்கர் நிலமும் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது. இந்த தகவல்களை ராணுவ பத்திரிகை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ராணுவத்தினர் வசம் இருந்த நிலப்பகுதியில் இருந்து தற்போது 63,187.91 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 2009 ஆம் ஆண்டு ராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 71.70% விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் மேலும் 28.30% நிலம் விடுவிக்கப்பட உள்ளதாக ராணுவச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
“போரின் தொடக்கத்தில் இருந்து முப்படையினருக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இதுவரை பெருமளவிலான நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 27,496.72 ஏக்கர் நிலம் ஆயுதப்படைகள் வசம் இருக்கிறது” என்று நளீன் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதப்படை வசம் இருக்கும் நிலங்கள் படிப்படியாக மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகங்களில் இருந்து இரண்டு பிரதான பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் நடந்த போது வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு பிரதான பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள் இயங்கின.
இதுவரை இரண்டு முக்கிய பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. அதன்படி, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் என்ற பெயர் நீக்கப்பட்டு, முக்கியமான முகாம்கள் தற்போது வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.