கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். எழுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 17 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இந்த வழக்கை, சிபிசிஐடி வசம், தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டு உள்ளார். கள்ளச்சாராய விற்பனை புகாரில், 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, தாமோதரன் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்த நிலையில், விஜயா என்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல, கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.