யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு
முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில் , நேற்று முன்தினம் நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
யுஜிசி நெட் தேர்வு நேற்று முன்தினம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்நிலையில் நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று தேசிய சைபர் குற்றப்பிரிவில் இருந்து மத்திய கல்வி அமைச்சகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது .
தேர்வு ரத்து:
இதையடுத்து செவ்வாய்க்கிழமை நடந்த நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது
மேலும் புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தனித்தனியாக தகவல் பகிரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
விசாரணை:
நடந்து முடிந்த நெட் தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனிடையே நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பிகார் பொருளாதார குற்றப்பிரிவிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.