செங்கடலில் மூழ்கிய 2ஆவது கப்பல் (Video)
செங்கடலில் ஆகக் கடைசியாக நடத்திய தாக்குதல் காணொளியை ஏமனைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சிக் குழு வெளியிட்டிருக்கிறது.
கிரீஸுக்குச் சொந்தமான Tutor எனும் அந்தக் கப்பல் மீது 2 பெரிய வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதைக் காணொளி காட்டுகிறது. சில நாள்கள் கழித்து அந்தக் கப்பல் நீரில் மூழ்கியது.
ஹௌதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் செங்கடலில் மூழ்கிய 2ஆவது கப்பல் அது.
ஒரு வாரத்துக்கு முன்னர் ஆளில்லாத படகில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டை வைத்து அனுப்பி Tutor கப்பலைத் தாக்கினர்.
தாக்குதலில் பிலிப்பீன்ஸைச் சேர்ந்த சிப்பந்தி ஒருவர் மாண்டதாக அமெரிக்கப் பாதுகாப்புத் தொடர்புத்துறை ஆலோசகர் ஜான் கெர்பி (John Kirby) தெரிவித்தார்.
எனினும் அந்தத் தகவலைப் பிலிப்பீன்ஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் இதுவரை குறிப்பிட்ட சில கப்பல்களைக் குறிவைத்து 60க்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவற்றால் நால்வர் மாண்டனர்.
இஸ்ரேல், அமெரிக்கா அல்லது பிரிட்டனுடன் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தாக்கும் கொள்கையில் குழு இருந்துவருகிறது.
தாக்கப்பட்ட கப்பல்களுக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் சண்டைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது.