தாமாக விமானத்தைத் தரையிறக்கும் நிலைக்குத் தள்ளப்படும் ஆஸ்திரேலிய விமானிகள்
நடுவானில் விமானங்களுக்கு இடையே விபத்து ஏற்படுமா என்ற அச்சம் ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் உதவ ஆள் இல்லை என்று விமானிகள் புலம்புவதாக South China Morning Post செய்தி நிறுவனம் சொன்னது.
டார்வின் (Darwin) நகரில் தற்போது நள்ளிரவு வேளையில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியாற்றுவதில்லை என்று அது கூறியது.
தாங்களே சொந்தமாக விமானத்தைத் தரையிறக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விமானிகள் சிலர் கூறினர்.
மற்ற விமானங்களுடன் மோதாமல் இருக்கப் போதிய இடைவெளி உள்ளதா என்பதை உறுதிசெய்வது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பொறுப்பு.
“விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்தின் வழிகாட்டுதல் இல்லாமல் அதைச் செய்வது ஆபத்தை அதிகரிக்கிறது…விபத்து ஏற்படும் சாத்தியமும் கூடுகிறது” என்று விமானிகள் சிலர் South China Morning Postஇடம் தெரிவித்தனர்.
கிருமிப்பரவலுக்குப் பிந்திய காலத்தில் விமானங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்தாலும் அதற்கு ஏற்றவாறு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.
நிலைமையைச் சரிசெய்யத் தற்காப்புப் பிரிவுடன் இணைந்து பணியாற்றுவதாக ஆஸ்திரேலியாவின் சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணையம் சொன்னது.
தற்போது நெருக்கடி இருந்தாலும் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அது உறுதி கூறியது.