T20 உலககோப்பை; ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.
இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் பவுலிங்கை சந்திக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் வீரர்கள் திணறினர். குறிப்பாக அவர் 24 பந்துகளில் 20 டாட் பால்களை வீசி மிரள வைத்தார். 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி பும்ரா வீசிய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலிருந்து தடுமாறத் தொடங்கியது. இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ், பும்ரா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து கட்டுக்கோப்பாக பந்து வீசிய பும்ரா 4 ஓவர்கள் வீசி அதில் ஒரு மெய்டன் உட்பட 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
அவர் சராசரியாக ஒரு ஓவருக்கு 1.75 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அவரது பந்துவீச்சை சந்திக்கவே ஆப்கானிஸ்தான் வீரர்கள் பயந்தனர். அவர்கள் மனதளவில் பும்ராவை கண்டு நடுங்கியதன் காரணமாக அவர் வீசிய 24 பந்துகளில் 20 டாட் பால்களை ஆடினார்கள். அவரது பந்துவீச்சில் ஒரே ஒரு ஃபோர் மட்டுமே அடிக்கப்பட்டது.
பின்னர் 134 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 28 பந்துகளில் 53 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். ரசிகர்கள் பலரும் ஆட்டநாயகன் விருதை பும்ராவுக்கு அளித்திருக்க வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அக்சர் பட்டேல் 3 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 3 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.