கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் விற்றதாக நால்வர் கைது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயஉயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக கள்ளச் சாராயம் விற்றதாக கருணாபுரம் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டியைக் கைது செய்தனர். தொடர்ந்து, அவரது மனைவி விஜயா, சகோதரர் தமோதரன் மற்றும் விஜயாவின் சகோதரி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர், கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராம் முன்னிலையில் 4 பேரையும் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில்அடைத்தனர். மேலும், கள்ளச் சாராய மொத்த வியாபாரி சின்னதுரை, ஜோசப் (எ) ராஜா, மாதேஷ் மற்றும் கல்வராயன்மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சிய 20 பேரிடம் போலீஸார் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளச் சாராயத்தில் மெத்தனால் வேதிப் பொருள் கலந்ததுஉறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த வியாபாரி சின்னதுரையிடம் இருந்து கள்ளச் சாராயத்தை கண்ணுக்குட்டி வாங்கியுள்ளார். அதில் மெத்தனால் கலந்து விநியோகிக்கப்பட்டுள்ளது. சங்கராபுரம் விரியூரைச் சேர்ந்த ஜோசப்ராஜா மெத்தனாலை கண்ணுக்குட்டிக்கு கொடுத்ததாகவும், ஜோசப் ராஜாவுக்கு புதுச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் மெத்தனாலைக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் செயல்படாத சில கெமிக்கல் நிறுவனங்களிடமிருந்து மெத்தனால் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சென்று, அங்குள்ள குழந்தைகள் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்த,தமிழக அரசால் ஒரு நபர்ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நேற்று கள்ளக்குறிச்சி வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய அவர், கருணாபுரம் பகுதிக்குச் சென்று, உயிரிழந்தோரின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்தார்.